ஃபைவ் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிய தையல் தொழிலாளி ஒருவர் வட்டியுடன் சேர்த்து 6 லட்சம் ரூபாய் வரை செலுத்திய நிலையில், 6 மாத தவணை செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவனம் வீட்டை பூட்டிச்சென்றதால் , அவர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றார்.
கடன் தவணை செலுத்தவில்லை என கூறி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தனது வீட்டிற்கு பூட்டுப் போட்டதால், தையல் கூலித்தொழிலாளி மனைவியுடன் வீட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தும் காட்சிகள் தான் இவை..!
விழுப்புரம் மாவட்டம் கானை அருகே வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல், கடந்த 2019ஆம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் இவர் மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதுவரை வட்டியுடன் சேர்த்து 6 லட்சம் ரூபாய் வரை செலுத்திய நிலையில், மேலும் இரண்டரை லட்சம் செலுத்தும்படி நிர்ப்பந்தித்த நிறுவன ஊழியர்கள் வீட்டிற்குள் புகுந்து அவதூறாக பேசி தன்னையும், மனைவியையும் வெளியேற்றிவிட்டு வீட்டுக்கு பூட்டு போட்டதாக கந்தவேல் குற்றஞ்சாட்டினார்.
கடந்த 6 மாத காலமாக தவணை பணம் செலுத்தாததால் வீட்டை பூட்டியதாக ஃபைவ் ஸ்டார் நிதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலையில், நிறுவன மேலாளர் மற்றும் கந்தவேலுவிடம் காவல்நிலையத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.