மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளியை ஏமாற்றி, உணவு வாங்கி தருவதாக கூறி 11 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஊர் ஊராக சென்று பாட்டுப்பாடி யாசகம் பெறும் விழுப்புரத்தை சேர்ந்த மாயவன், துணைக்காக தனது தங்கையின் மகளை அழைத்து வந்துள்ளார்.
நேற்று இரவு சீர்காழி மணிக்கூண்டு பகுதியில் யாசகம் பெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர் உணவு வாங்கி தருவதாக சிறுமியை அழைத்துச் சென்று நீண்ட நேரமாக திரும்பாததால் மாயவன் அழுதபடியே பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை வைத்து சிறுமி தேடப்பட்ட நிலையில், தோப்புப்பள்ளியில் இளைஞர் ஒருவருடன் சிறுமி அழுதவாறு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று சிறுமியை மீட்ட போலீசார், கடத்தி சென்ற ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.