கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை வரை அவர் தியானம் செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் முடிந்து பிரதாப்கரிலும், 2019-இல் கேதர்நாத்திலும் பிரதமர் தியானம் மேற்கொண்டார். நேற்று கன்னியாகுமரி வந்த மோடி, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.
காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம் செய்த பிரதமர், அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து மனமுருக மந்திரங்கள் சொல்லி தியானத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் தியானம் மேற்கொண்டிருப்பதை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் நிகழ்ச்சியால் விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, கடும் சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.