திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி யாக பணியில் இருந்து இன்று ஓய்வுபெற இருந்த பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான வெள்ளைத்துரை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த வெள்ளைத்துரை, சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவில் இடம்பெற்றவர். மேலும் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணி உள்பட 12-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை செய்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லாக்கப் மரணத்தில் வெள்ளைத்துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கின்இறுதி அறிக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதனால் இன்று பணி ஓய்வு பெற இருந்த அவரை, நேற்றிரவு பணியிடை நீக்கம் செய்து முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார் . இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக வெள்ளைத்துரை தெரிவித்துள்ளார்.