பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திகாந்த். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் ஜெய்குரு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஜெய்குரு மதியம் சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக நேற்று பட்டுக்கோட்டை பெரியதெருவில் உள்ள முருகையா ஹோட்டலுக்கு பாத்திரங்களுடன் சென்றுள்ளார்.
110 ரூபாய் கொடுத்து ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிய ஜெய்குரு, சாப்பாட்டை தான் கொண்டுவந்த பாத்திரத்தில் போட்டு தருமாறு கூறியுள்ளார். ஆனால், ஹோட்டல் ஊழியர்கள் பாத்திரத்தில் பார்சல் சாப்பாடு தரமாட்டோம், பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என கூறியதாக தெரிகிறது.
அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியதால், ஹோட்டல் கேஷியர் டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்துள்ளார்.
தகவலறிந்து ஹோட்டலுக்குச் சென்ற சிறுவனின் தந்தை சக்திகாந்திடமும் பிளாஸ்டிக் பைகளில் கட்டிவைத்துள்ள உணவைத்தான் வழங்க முடியும் என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கோரி ஜெய்குரு தனது தம்பியுடன் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பட்டுக்கோட்டை முருகையா ஹோட்டல் தரப்பினர், அரசு அனுமதி அளித்துள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாகவும், உணவகத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில், உள்நோக்கத்துடன் புகார் அளித்திருப்பதாகவும் கூறினர்.