திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பீகார் இளைஞர், வழிப்பறிக் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பூர் கணியாம்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் 22 என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து ஆகாஷ்குமார் தனது தங்கும் அறைக்கு தனியாக சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், அவரை சுற்றிவளைத்து செல்போனை பறிக்க முயன்றது. ஆகாஷ் குமார் செல்போனை தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாஷ் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ்குமார் புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி நிறுவனத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் திருமுருகன் பூண்டி போலீசார், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து சக தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
உயிரிழந்த ஆகாஷ் குமாரின் உடல் பிணக்கூறாய்வுக்கு பின்னர் ஆத்து பாளையம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பத்தில் ஈடுபட்ட வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.