வங்கி பக்கமே செல்லாத கட்டிட தொழிலாளி ஒருவரின் பெயரில் போலியான நகை அடமானம் வைத்து 23 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறி வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் சிவகாசியில் அரங்கேறி உள்ளது
சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்களான ராமு- முத்துலட்சுமி தம்பதியினரின் மகன் செல்வம் . இவர் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த பீயூலா என்பவரை திருமணம் செய்து கொண்டு, கடந்த சில வருடங்களாக மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
கட்டிட வேலைக்கு சென்று வந்த செல்வத்திற்கு, சிவகாசி பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில் செல்வம் ஒரே நாளில் தனித்தனியாக 4 போலியான நகைகளை அடமானம் வைத்து, 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கடனாக பெற்றதாகவும், அந்த பணத்தை உடனடியாக திரும்ப கட்ட வேண்டும் எனவும், அதற்காக இந்த முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் குடும்பத்தினர் , வங்கி பக்கமே வராத தங்கள் குடும்பத்தாருக்கு எப்படி? இது போன்ற முன்னறிவிப்பு நோட்டீஸ் வங்கியிலிருந்து வந்தது என வங்கிக்கு நேரடியாக சென்று நோட்டீஸ் குறித்து விளக்கம் கேட்டனர். வங்கி அலுவலர்கள் செல்வம் போலியான நகைகளை கொடுத்து ரூபாய் 23 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளதாகவும், அந்த பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துமாறும் வலியுறுத்தியதால் செய்வதறியாது விழிபிதுங்கினர்
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த செல்வம் குடும்பத்தார், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தங்களுக்கு இந்த வங்கியில் கணக்கும் இல்லை, தங்களிடம் தங்க நகையும் கிடையாது, போலியான நகையை வைத்து தாங்கள் பெரிய அளவிலான தொகையையும் பெறவில்லை என்றதுடன் இதில் காவல்துறையினர் விசாரணை நடத்தி தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
இது குறித்து கேட்டதும், கடன் பெற வழங்கப்பட்ட செல்வத்தின் அடையாள ஆவணத்தில் உள்ள முகவரிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்த வங்கி அதிகாரிகள் கையெழுத்து மட்டும் சற்று வேறு பட்டு காணப்படுவதாகவும் அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதே வங்கியில் கடந்த மார்ச் மாதம் ரூபாய் 7 கோடியே 55 லட்சத்திற்கு ,56 நபர்களின் பெயர்களில், 126 நகைக்கடன் கணக்குகளில் போலியான தங்க நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சிவகாசி பேருந்து நிலையம் அருகே நகைக் கடை நடத்தி வந்த பாலசுந்தரம் மற்றும் யூனியன் வங்கி சிவகாசி கிளையின் நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.