ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர் தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியே தெரியாத அளவுக்கு நுரை பொங்கி ஓடுகிறது.
ஆற்றுப் படுகையில் கலந்துள்ள அதிகப்படியான ரசாயன கழிவு நீரே இந்த நுரைக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காற்றின் காரணமாக ஆற்றங்கரை ஓரமாக உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த நுரை, ஒரு சில இடங்களில் தென்னைமரத்தின் முக்கால் பகுதியை மூடும் அளவுக்கு மலை போல காட்சியளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
பல ஏக்கர் பரப்பளவிலான முட்டைகோசு தோட்டங்கள் நுரையால் மூடப்பட்டதால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் கெலவரப்பள்ளி தேக்கத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் தேக்கத்தின் மதகுகள் சீர் செய்யப்படுவதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் நிலையில், அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.