மயிலாடுதுறையில் கல்லூரி மாணவியை 2 வருடமாக காதலித்து, ஊர் சுற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் நெருங்கி பழகிய காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி தானும் தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
மயிலாடுதுறை டவுன்ஸ்டேசன் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், பூம்புகார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த சிந்துஜா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சிந்துஜா மயிலாடுதுறையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காதல் ஜோடி பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் பைக்கை நிறுத்தி சத்தம் போட்ட நிலையில் சிந்துஜா தான் ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து ஆகாஷ் மீது ஊற்றி தீவைத்து விட்டு தானும் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் உடலில் பற்றி எரிந்த தீயுடன் சாலையில் ஓடினர். ஆகாஷ் அருகில் உள்ள ஆற்றை நோக்கி ஓடிய நிலையில் அங்கு தண்ணீர் இல்லாததால் அங்கேயே விழுந்தார். சிந்துஜாவின் உடலில் பற்றிய தீயை அருகில் உள்ள கடைக்காரர் போர்வையை போர்த்தி அணைத்தார்
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் , தன்னை 2 வருடமாக காதலித்து ஊர் சுற்றிய ஆகாஷ் தற்போது வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், தான் கண்டித்ததும், அவளை மறக்க முடியாது என்று ஆகாஷ் பிடிவாதமாக கூறியதால் அவன் மீது பெட்ரோலை ஊறி தீவைத்ததாக சிந்துஜா வாக்குமூலம் அளித்தார். ஆகாஷ் தன் உடலெல்லாம் எரியுது... என்று அலறியபடியே இருந்தார்
காதலன் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் பழகுவதை ஏற்றுக் கொள்ள மனமில்லாததால், முன் கூட்டியே திட்டமிட்டு ஜூஸ் பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கையோடு எடுத்துச்சென்ற சிந்துஜா, ஆகாஷ் பைக்கில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத நேரத்தில் அவன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகவும், அவனால் உடனடியாக தப்பிச்செல்ல இயலவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.