உளுந்தூர்பேட்டை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து தப்பி ஓட முயன்ற இளைஞரை பிடித்து மாலை மாற்றி திருமணம் செய்து வைத்ததால், அவர் கதறி அழுதார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் செவிலியரான ரோஸ்லின்மேரியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தமிழரசன் காதலியுடன் அடிக்கடி தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஸ்லின் மேரி தமிழரசனிடம் கேட்கும் போதெல்லாம் தனது சகோதரி திருமணம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிவந்துள்ளார் தமிழரசன். இந்த நிலையில் காதலுக்கு தமிழரசன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி ரோஸ்வின்மேரியை விட்டு விலக முடிவு செய்த தமிழரசன், ரோஸ்லின்மேரி செல்போனில் தொடர்பு கொண்டால் கூட அவரது அழைப்பை ஏற்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து ரோஸ்லின் மேரி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், ஆயிரம் விளக்கு உதவி ஆணையரிடமும் புகார் அளித்த நிலையில், போலீசார் சொந்த ஊரில் புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ரோஸ்லின் மேரி. அதன் பேரில் இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது ரோஸ்லின் மேரியை திருமணம் செய்து கொள்ளமறுத்தால் பலாத்கார வழக்கில் சிறை செல்ல நேரிடும் என்று போலீசார் எச்சரித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட தமிழரசன், அருகில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்வதாக கூறிச் சென்றார்.
அங்கு ரோஸ்லின்மேரி உறவினர்கள் வாங்கி வந்த மாலையை மாற்றிக் கொள்ளும் தருணத்தில் ரோஸ்லின் மேரி கையால் மாலை போட்டதை ஏற்க மறுத்த தமிழரசன் தப்பி செல்ல முயன்றார்.
அங்கு இருந்தவர்கள் தமிழரசனை பிடித்து மீண்டும் அறிவுரை கூறினர். அதற்கு பல காவல் நிலையங்களில் தன் மீது புகார் கொடுத்து தன்னை ரோஸ்லின்மேரி அவமானப்படுத்தியதாக தமிழரசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . பின்னர் மாலை மாற்றிக் கொள்ளமாட்டேன், தாலி கட்டுகிறேன் என்று கூறி தாலி கட்டிய பின்பு அங்கிருந்து அவர் மீண்டும் தப்பி ஓட முயன்றார்.
தமிழரசன் தொடர்ந்து ரோஸ்வின்மேரியுடன் குடும்பம் நடத்தவில்லை என்றால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் ரோஸ்லின் மேரி மற்றும் அவரது உறவினர்களை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கண்ணீரும் கம்பலையுமாக புது மாப்பிள்ளை தமிழரசன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.