விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சங்கரன்கோவில் சாலை - தென்காசி சாலை இணைப்புச் சாலை திட்டத்தை உடனே செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
2 கிலோ மீட்டர் தொலைவுக்கு இணைப்புச் சாலை அமைக்க, நிலம் கையகப்படுத்த 8 கோடியே 34 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இணைப்புச் சாலை நீர்நிலையை ஒட்டிச் செல்வதாகவும், சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறி, சாலைத் திட்டத்துக்குத் தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இணைப்புச் சாலை குறைந்த நீளமே உள்ளதால், சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி தேவையில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ள நிலையில், சாலைப் பணியை மேலும் தாமதிப்பது பொதுமக்களின் நலனுக்குப் பாதகமாக அமையும் என்றும், திட்டச் செலவு அதிகரிக்கும் என்றும் கூறி, தடை கோரிய மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.