சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 70 பயணிகளுடன் மலைப்பாதையில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் தறிகெட்டு ஓடி தலைக்குப்புற பாய்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று மாலை 5:30 மணிக்கு முத்து என்ற தனியார் பேருந்து சேலம் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டது.
பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில், மலைப்பாதையில் பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகின்றது.
13 வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது தறிகெட்டு ஓடிய பேருந்து அங்கிருந்து 100 அடிக்கு கீழ் நோக்கி தலைகுப்புற பாய்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மோதி செங்குத்தாக நின்றது
பேருந்து பாய்ந்த வேகத்தில் பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டனர்.
சாலையில் விழுந்தவர்கள் எழுந்திருக்க இயலாமல் அலறினர். பலருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது
அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்த 65 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கார்த்திக், ஹரிராம், மாது, குமார், திருச்செங்கோடு முனீஸ்வரன் அகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்
பேருந்து ஓட்டுனர் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பாதையில் அதிவேகமாக இறங்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்த போலீசார் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.