கோயம்புத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டை கழிப்பிடமாக மாற்றியதாக கூறி சென்னை இளைஞர்களை, ஆட்டோ ஓட்டுனர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து ஓடவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பக்க நுழைவு வாயில் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ஈஷா யோகா மையம் சென்று விட்டு, சென்னை செல்வதற்காக 7 இளைஞர்கள் ரயில் நிலையம் வந்தனர்.
அதில் ஒரு இளைஞர் அவசரம் எனக்கூறி ஆட்டோ ஒன்றின் பின்புறம் சென்று சிறுநீர் கழித்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆட்டோ ஸ்டாண்டை கழிப்பிடமாக மாற்றிவிட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருடன் வந்த மற்ற இளைஞர்கள் தாக்குதலை தடுக்க வந்த போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுனர் முகமது இப்ரகிமின் தலையில் காயம் ஏற்பட்டது
இதனால் ஆத்திரம் அடைந்த சக ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த இளைஞர்களை ஹெல்மெட்டால் அடித்து ஓட ஓட விரட்டி தாக்கிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டாலும் தாக்குதல் தொடர்பாக யாரும் புகார் தரவில்லை என்ற கோயம்புத்தூர் பந்தயசாலை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.