கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்தும், கழுத்தை முறித்தும் கொன்ற கொடூரக் கணவனை தூப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு கல்லாவி அருகே 4 ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் காவலுக்கு சீதை என்ற குருவிக்கார பெண்ணின் குடும்பத்தை, பிரகாஷ் பணிக்கு அமர்த்தி உள்ளார். சீதை கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து சம்பவத்ன்று மனைவியை தேடி கணவன் சின்னமுத்து மாந்தோப்புக்கு சென்றுள்ளார். அவருடன் உறவினர்களான ராம்குமாரும், அரசு என்பவரும் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் பச்சிளம் கைக்குழந்தையுடன் இருந்த மனைவியை கண்டதும் ஆத்திரம் அடைந்த சின்னமுத்து, 2 வருடம் பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த குழந்தை யாருக்கு பிறந்தது? எனக்கேட்டு தகராறு செய்தாக கூறப்படுகிறது. தன்னுடன் சேர்ந்துவாழ வருமாறும் அழைத்துள்ளார். வரமறுத்ததால் சீதையை கத்தியால் குத்தி வயிற்றை கிழித்து குடலை உருவிய பின்னரும் சீதை உயிருடன் இருந்ததால் அவரது கழுத்தை முறித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளதாக, சொல்லப்படுகிறது.
சத்தம் கேட்டு அங்கு வந்த தோப்பு உரிமையாளர் பிரகாஷ், பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து பால்ரஸ் குண்டுகளை போட்டு சுடத்தொடங்கி உள்ளார். துப்பாக்கியை கண்டதும் சின்னமுத்துவும், கூட்டாளிகளும் தப்பி ஓடியுள்ளனர். சின்னமுத்துவை விரட்டி விரட்டி சுட்டதால் அவரது முதுகில் பல இடங்களில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன.
குண்டுகாயத்துடன் மருத்துவமனையில் சின்னமுத்து சிகிச்சைக்காக சேர்ந்ததால் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். தோப்பு உரிமையாளர் பிரகாஷ் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக சின்னமுத்து வாக்குமூலம் அளித்த நிலையில், பிரகாஷை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
தோப்பு காவலாளியான சீதையுடன் தனக்கு தவறான தொடர்பு இருந்ததாகவும், அதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்த பிரகாஷ், தனக்கு பெண் குழந்தை இல்லாததால் அவரை வெளியே அனுப்பாமல் தோப்பு வீட்டிலேயே வைத்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சின்னமுத்து உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சீதையை கொன்றதால் தாங்க முடியாத ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இரு வேறு வழக்குகள் பதிவு செய்து பிரகாஷ், ராம்குமார், அரசு ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சின்னமுத்து சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.