மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்த ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர், நீண்ட சட்ட போரட்டத்துக்கு பின்னர் முதன் முறையாக இந்திய தேர்தலில் வாக்களித்துள்ளார்
மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை.. முந்திக் கொண்டு வந்தது ஆனந்த கண்ணீர்..!
தான் முதல்முறை வாக்களித்து விட்டதாக , தான் இந்தியன் என்பதை உணர்வதாக பெருமையுடன் தெரிவித்தார் 38 வயதான ஈழத்தமிழச்சி நளினி.
1986 ஆம் ஆண்டு மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்த நளினி 2021 ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தார். வழங்க மறுத்ததால் தனது பிறப்புச்சான்றிதழ் உடன் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார்
1995 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் மூன்றாவது பிரிவின் படி 1950 ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து 1987 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறக்கும் எவரும் இந்திய குடிமகன் ஆவர் என்ற அடிப்படையில் நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட் பெற்ற பின்னர், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின் பேரில் திருச்சி அகதிகள் முகாமில் குடும்பத்துடன் வசித்து வரும் நளினிக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அகதிகள் முகாமில் தங்கி உள்ள ஒருவர் இந்திய தேர்தலில் வாக்களித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.