நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் உள்ள போதமலை பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
கீழூர், மேலூர், கெடமலை என 3 கிராமங்களில் மொத்தமாக 1142 வாக்காளர்கள் உள்ள இப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தலையில் சுமந்தபடி நடந்து சென்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தலை சுமையாகவே வாக்குப்பதிவுக்கான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கீழூர் ஊராட்சியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியிலும், கெடமலை பகுதியில் பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க பள்ளியிலும் என 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது,போதமலை பகுதியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வருட காலத்திற்குள் பணி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.