மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மதுரைக்கு 10 ஆண்டுகளாக அதிமுக செய்த திட்டங்களையும், 3 ஆண்டுகளாக திமுக செய்த திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என சரவணன் கேட்டுக்கொண்டார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், வயதான காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஓய்வெடுக்காமல், ராமநாதபுரத்தில் பலாப்பழத்தை சுமந்துகொண்டு வாக்கு சேகரித்து வருவதாகக் கூறினார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் காஞ்சி நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடை கடையாகச் சென்று வாக்கு கேட்டவர், வாழைப்பழக் கடையில் அமர்ந்து வாழைப்பழங்களை கூவி விற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் பழனி எம்.எல்.ஏ உட்பட கூட்டணி கட்சியினருடன் சென்று கொடைக்கானல் சுற்றுவட்டார கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். தர்பூசணி விற்பனை செய்துகொண்டிருந்த சிறுவனிடம் “பிரதமர் மோடியை தெரியுமா” எனக் கேட்க, தெரியும் என்று பதிலளித்த சிறுவன், விவசாயிகளுக்கான உதவித் தொகை, ஜல்ஜீவன் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டான்.
திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நகரின் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காய்கறிக் கடை மற்றும் பூக்கடைகளில் விற்பனை செய்து அவர் வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் முஸ்லீம் லீக் கட்சியின்வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து நடிகர் வாகை சந்திர சேகர் தொண்டியில் பிரச்சாரம் செய்தார். மக்கள் பணத்தில் பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வருகிறார் என அப்போது அவர் பேசினார்.