உதகை மேட்டுப்பாளையம் சாலையில் ஏராளமான சூட்கேஸ்களுடன் காரில் சென்ற திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் காரை வழிமறித்த தேர்தல் பறக்கும்படை பெண் அதிகாரி மற்றும் போலீசார், இரு பைகளை மட்டும் திறந்து பார்த்து விட்டு அனுப்பி வைத்தனர்
உதகைக்கு சுற்றுலா வந்தவர்களிடம் 67 ஆயிரம் ரூபாயை பறித்து கைசெலவுக்கு கூட காசில்லாமல் கண்ணீர் சிந்தவைத்து கடமையாற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கார் நிறைய பெட்டிகளுடன் வந்த நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நிறுத்தி ஒரு பெட்டி மற்றும் இரு பைகளை மட்டும் திறந்து பார்த்து விட்டு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது
நீலகிரிக்கு தனது படை பரிவாரங்களுடன் சென்ற திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரியான , குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா என்பவர் மறித்தார்.
காருக்குள் இருந்த ஆ.ராசா, அமைச்சர் ராமச்சந்திரன், முபாரக் உள்ளிட்டோர் காரை விட்டு இறங்கி நின்றனர்
ஆ.ராசாவின் கார் ஓட்டுநர், காரின் பின்பக்க டிக்கியைத் திறந்ததும் நிறைய பெட்டி மற்றும் பைகள் இருந்த நிலையில், ஒரே ஒரு சிறிய பெட்டியைத் திறந்து காண்பித்தார், உடனடியாக ஆ. ராசா, மற்ற பெட்டிகளில் ஆடைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து டிராவல் பேக்கை திறந்து காண்பித்தார் ஓட்டுனர். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பார்த்து , அமைச்சர் தலையாட்டிய நிலையில், காரை சோதனையிட்டதாக கணக்கு எழுதிக் கொண்டு அவரது காரையும் அவருக்கு பின்னால் வந்த அனைத்து கார்களையும் அப்படியே அனுப்பி வைத்ததாக வீடியோ வெளியியாகி உள்ளது
அரசியல் வாதிகளின் கார்களை முழுவதுமாக சோதனை செய்யாமல் பதவிசாக அனுப்பி வைத்துவிட்டு , மாடு வாங்க செல்பவர்களையும், மளிகை பொருட்கள் வாங்கச் செல்லும் வியாபாரிகளிடமும் பணத்தை பறித்துக் கொள்வதை தேர்தல் பறக்கும்படையினர் செய்துவருவது தேர்தலில் பணப்புழக்கத்தை எப்படி கட்டுப்படுத்தும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.