படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என கூறியும் ஏற்க மறுத்ததால் கோபத்தில் அடித்ததில் உயிரிழந்த 16 வயது மகள் சடலத்தை டூவீலரில் தூக்கிச் சென்று 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏரியில் தந்தை வீசிச் சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ். கடந்த 14-ம் தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது 16 வயது மகள் வீடு திரும்பவில்லை என பாகலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் பிரகாஷ்.
இந்நிலையில், 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஏரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் அந்த சிறுமி.
தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டதால் அவரது வீட்டிலிருந்தே விசாரணையை துவங்கினர் போலீஸார். அப்பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றிய போலீஸாருக்கு பிரகாஷ் துணியால் மூடப்பட்ட ஒரு பொருளை தனது மனைவியோடு சேர்ந்து டூவீலரில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பிரகாசும் அவரது மனைவி காமாட்சியும் பதிலளிக்கவே விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீஸார். அதில், மகளை பெற்றோரே அடித்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரிய வந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு மாணவியை ஆசை வார்த்தை கூறி பக்கத்து ஊரான முத்தாலியை சேர்ந்த சிவா என்ற 23 வயது நபர் அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவா கைது செய்யப்பட்டார்.
அண்மையில், ஜாமீனில் வெளியே வந்த சிவாவை மாணவி சென்று சந்தித்தது பிரகாசிற்கு தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் தனது மகளுக்கு இந்த வயதில் காதல் தேவையில்லை என புத்திமதி கூறியுள்ளார் பிரகாஷ். தாய் மற்றும் பெரியம்மா மீனாட்சியும் புத்தி கூறியும் மாணவி கேட்கவில்லை என கூறப்படுகிறது.
அறிவுரையை உதாசீனப்படுத்தியதால் கோபத்தில் மகளை பிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மரக்கட்டிலில் தலை மோதியதில் மாணவி அதே இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கோபத்தில் செய்த செயலலால் மகள் உயிரிழக்கவே, சடலத்தை துணியில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று ஏரியில் வீசியது விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
மகளை கொலை செய்ததாக தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சிறுமியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை கைது செய்தனர் போலீஸார்.
படிக்கும் வயதில் ஏற்பட்ட காதலால் மகளை இழந்ததோடு பெற்றோரே குற்றவாளியாகி இருப்பது உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.