மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்!
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள்.
சிவராத்திரியையொட்டி இன்று நாள்முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.
மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர் , காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், தஞ்சை பிரகதீஸ்வரர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.