தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை 18 கிராமங்களில் இருந்து வந்த திரளான மக்கள் தரிசித்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தட்டாத்திமூளை கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், செட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள 31 அடி உயர துர்க்கை சுடலை காளியம்மன் மற்றும் பெரியாண்டிச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் அம்மன் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பிறகு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் கலசாபிஷேக பெருவிழாவையொட்டி ஆதிகேசவ பெருமாளுக்கு 1008 கலசங்களில் இருந்த புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.