வீட்டு வசதிவாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் ஜூலைக்குள் முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
நீதிமன்ற விசாரணை தொடங்கும் முன்பே இவ்வழக்கிலிருந்து ஐ.பெரியசாமியை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் விடுவித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில், ஆளுநரிடம் அனுமதி பெறாமல், சட்டபேரவை தலைவரிடம் அனுமதி பெற்றது தவறானது எனவே வழக்கை ரத்து செய்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என ஐ.பெரியசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அளித்த தீர்ப்பில், முறையான அனுமதியை பெற்று வழக்கு விசாரணையை தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.
வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக விட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினசரி அடிப்படையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.