காரைக்குடியில் பழ. கருப்பையா எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார், தனக்கு சால்வை அணிவிக்க வந்த வயதான ரசிகரிடமிருந்து சால்வையைப் பிடுங்கி எறிந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பழ கருப்பையாவின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த சிவக்குமார், என்னைவிட 2 வயது சிறியவனாக இருந்தாலும் பழ கருப்பையாவின் காலில் விழுந்து வணங்குவேன் என்று கூறியபடியே சென்று அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மேடையை விட்டு இறங்க முயன்ற சிவக்குமாரை எதிர்கொண்ட வயதான ரசிகர் ஒருவர், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய முயன்றார். ஆனால் சிவக்குமாரோ அந்த சால்வையை அவரது கையிலிருந்து பிடுங்கி மேடைக்குக் கீழே வீசினார். இதனால் அந்த ரசிகரின் முகம் வாடிப்போனது.
சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டுச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல் சால்வையைப் பிடுங்கி வீசி எறிந்து சென்றது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.
சீரான உடற்பயிற்சி, யோகா, தியானம் என, உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாக பல மேடைகளில் சிவக்குமார் பேசியதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், தற்போதைய செயல்பாடுகள் சரியானாதுதானா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.