தமிழ்நாட்டில் வாரம் 5 புது படங்கள் ரிலீஸ் ஆனாலும், டாப் ஹீரோக்களின் பழைய கல்ட் கிளாசிக் திரைப்படங்களை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால், பழைய படங்களை தூசுதட்டி டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மறுபடியும் திரையிட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் ரீ-ரிலீஸ் சினிமா ரசனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...
புதுமை என்ற பெயரில் இரைச்சல் இசை... குழப்பும் கதைக்களம்...தெரிக்கும் ரத்தத்துடன் இந்த வாரம் தமிழில் மொத்தம் 8 படங்கள் வெளியாகி உள்ளன.
நினைவெல்லாம் நீயடா, வித்தைக்காரன், பைரி, பர்த் மார்க், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும், இந்த படங்களுக்கு எல்லாம் பார்வையாளர்கள் வருகை இன்றி திரையரங்குகள் காத்து வாங்குகின்றன.
அதே நேரத்தில் ரீ-ரிலீஸ் படங்களான ரஜினியின் அண்ணாமலை, அஜித்தின் வாலி, பில்லா மற்றும் விஜய்யின் காதலுக்கு மரியாதை, திருமலை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கல்லா கட்டுகின்றன.
இதனால் திரையரங்குகளில் வெளியாகும் புதிய சிறிய பட்ஜெட் படங்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் திரையரங்கு உரிமையாளர்களும் ரீ ரிலீஸ் படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.
புதுப்படங்கள் கொடுக்காத வசூலை இதுபோன்ற ரீ-ரிலீஸ் படங்கள் தருவதால் பழைய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். பெரும்பாலான இளைஞர் கூட்டங்களும் பழைய ரீ-ரிலீஸ் கல்ட் கிளாசிக் திரைப்படங்களைத் திரையரங்களுகளிலேயே காண விரும்புகின்றனர்.
அதிலும் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் ஆக இந்த மாதம் மட்டும் சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்கள் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2 மாதங்களில் வாரணம் ஆயிரம், முத்து, மயக்கம் என்ன, ஆளவந்தான், வல்லவன் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அடுத்து வரும் 2 மாதங்களுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்த டாப் ஹீரோக்களின் 6 பழைய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.