தூங்கிக் கொண்டிருந்தவரை அதிகாலை 3 மணிக்கு எழுப்பி மது குடிக்க பணம் கேட்டும் தராததால் கடைசி விவசாயி திரைப்படத்தின் நடிகையை பெற்ற மகனே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மதுரை அருகே நடந்தது.
சாமி கும்பிட ஜாதி பார்க்கக் கூடாது என திரைப்படத்தில் வசனம் பேசிய இவர் தான் பெற்ற மகனால் அடித்துக் கொல்லப்பட்ட நடிகை காசம்மாள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற கடைசி விவசாயி திரைப்பட சூட்டிங்கின் போது வாய்ப்பு பெற்று அந்த படத்தில் நடித்தார். தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார் காசம்மாள்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாயோடு வசித்து வந்தார் அவரது மூத்த மகன் நமகோடி. சரிவர வேலைக்குச் செல்லாத நமகோடி மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
தன்னிடம் பணம் இல்லாத போதெல்லாம் கூலி வேலைக்குச் சென்று தாயார் வைத்திருக்கும் பணத்தை சண்டையிட்டு வாங்கிச் சென்று போதைக்காக நமகோடி செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
போதையில் வீட்டில் படுத்திருந்தவருக்கு அதிகாலை 3 மணியளவில் போதை தெளியவே தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி பணம் கேட்டுள்ளார் நமகோடி. தன்னிடம் பணம் இல்லையெனவும் இந்த நேரத்தில் பணம் கேட்கிறாயே எனவும் கேட்ட தாய் காசம்மாளை அங்கிருந்த கட்டையால் நமகோடி தாக்கியதாக கூறப்படுகிறது.
தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறி காசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காசம்மாளை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தவர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காசம்மாள் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார், தலைமறைவாக இருந்த நமகோடியை கைது செய்தனர்.
தள்ளாத வயதிலும் உழைத்து சாப்பாடு போட்டு வந்த தாயை மது போதைக்காக மகனே அடித்துக் கொலை செய்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.