விளம்பரம்பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தைக் காண்பித்து My V3 Ads என்ற செல்போன் செயலி மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வரும் சக்தி ஆனந்தனுக்கு எதிராக போலீசார் மோசடி வழக்கு செய்திருப்பதை கண்டித்து முதலீட்டாளர்கள் கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இவர் தாங்க My V3 Ads என்ற செயலியை பதிவிரம் செய்து உறுப்பினராக சேர்ந்து விளம்பரம் பார்த்தால் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் கொட்டும் என்ற புகாருக்குள்ளாகி இருக்கும் சக்தி ஆனந்தன்..!
கோவையை தலைமையிடமாக கொண்டு My V3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார்.
யூ.டி.யூ.பில் இந்த செயலிக்கு என்று பிரத்யேக சேனலும் இயங்கி வருகிறது.
இந்த செயலியில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராகி , அதன் யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்த்தால் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் , புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் உறுப்பினர்கள் அதிக கமிஷன் பார்க்கலாம் என்றும் ஆசை காட்டி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாக கோவை சைபர் குற்றபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆசைவார்த்தைக்கூறி உறுப்பினர்களை சேர்ப்பதும், உறுப்பினர்கள் செலுத்தும் பணத்திற்கு மருத்துவர்கள் பரிந்துரையின்றி ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்குவதும் சட்ட விரோதம் என்று கூறி My V3 Ads என்ற நிறுவனத்தின் மீது கோவை மாநகர குற்றப்பிரிவில் , சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்து என்பவர் புகார் அளித்தார்.
விசாரணையில் சக்தி ஆனந்தனின் My V3 Ads செல்போன் செயலியை இதுவரை 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருப்பதும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.
தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதால் My V3 Ads நிறுவனம் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆட்களை சேர்த்து விட்டு ஆயிரக்கணக்கில் கமிஷன் பெற்று வருவோர், அந்த நிறுவனத்தின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கவர உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தன் கேட்டுக் கொண்டதன் பேரில் நூற்றுக்கணக்கானோர் நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசியல் தலைவர் போல தனது காருக்குள் இருந்து சன்ரூஃபை விலக்கிக் கொண்டு கையெடுத்து கும்பிட்டபடி சக்தி ஆனந்தன் போஸ் கொடுக்க, அவரது செயலியை நம்பி பணம் போட்டவர்கள் சுற்றி நின்று வீடியோ எடுத்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
My V3 Ads உறுப்பினர்கள் கூறும் போது "நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப்பார்க்கிறார்கள் என்றனர்
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆருத்ரா, ஐ.ஐ.எப்.எல் மோசடிகளும் இதே போல் தான் அரங்கேறியது என்று சுட்டிக்காட்டிய போலீசார் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின் பற்றாமலும், வங்கிகளை விட அதிக கமிஷன் மற்றும் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெறும் எந்த ஒரு செயலும் சட்ட விரோதம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்