கிளாம்பாக்கத்தில் இருந்து தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
தொடர் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் போதும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்தவகையில் தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார விடுமுறை நாட்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க மக்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்வதற்காக அங்கு குவிந்தனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல புறப்பட்ட பக்தர்கள் பேருந்துகள் கிடைக்காமல் கால் கடுக்க காத்திருப்பதாக ஆதங்கப்பட்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 8 ரூபாய் கட்டணத்தில் செல்ல வேண்டிய தான், 200 ரூபாய் செலுத்தி கிளாம்பாக்கம் வந்து நொந்து போனதாக பயணி ஒருவர் வேதனை தெரிவித்தார்.
பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுவதாக கூறி விட்டு, கோயம்பேட்டிலேயே பயணிகளை ஏற்றிக் கொண்டுவருவதாகவும், அப்படியென்றால் தங்களை கிளாம்பாக்கம் வரச்சொன்னது ஏன் ? என்று சிலர் உரிமைக்குரல் எழுப்பினர்.
அரசு பேருந்து இயக்கமே முழுவதும் ஒரு வரையரைக்குள் கொண்டுவரப்படவில்லை என்று பயணிகள் குற்றஞ்சாட்டும் நிலையில், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் புதன்கிழமை இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இயக்கும் வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை எனக்கூறி, கிளாம்பாக்கம் செல்ல மறுத்து ஓட்டுனர்களை வைத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இரவுக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.