விளை நிலங்களில் இரை தேடி வந்த அரியவகை பறவைகளை வலை விரித்து பிடித்து ஓட்டல்களில் விற்பதற்காக மூன்று சக்கர சைக்கிளில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற வேட்டைக்கார கும்பலை பறவை நேசர் ஒருவர் மடக்கிப்பிடித்து அத்தனை பறவைகளையும் விடுவித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருப்புக்கோட்டை சாலை ஓரத்தில் உள்ள சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களில் இரை தேடி சென்ற அரிய வகை பறவை இனங்களை வேட்டை கும்பல் ஒன்று பிடித்துக் கொண்டிருப்பதாக பறவை நேசர் வழக்கறிஞர் கோட்டை சுந்தரமூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த பகுதிக்கு விவசாயி முருகேசனுடன் விரைந்த கோட்டை சுந்தரமூர்த்தி ஆகியோர் பறவை வேட்டைக்கு பயன்படுத்திய கண்ணீ மற்றும் வலைகளை கைப்பற்றி விசாரித்த போது, தாங்கள் வேட்டையாடவில்லை என்று அவர்கள் அழுது நடித்தனர்.
அவர்கள் வந்த வண்டியின் மேல் பகுதியில் பார்த்த போது எந்த பறவைகளும் இல்லை.
ஆனால் வண்டியின் அடிப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த ரகசிய அறையை திறந்து பார்த்த போது உள்ளே துணி மூட்டை போல பறைவைகளை அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
சில அசைவ ஹோட்டலுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்ய இந்த அரிய வகை பறவைகளை கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்ததோடு, அது தங்களது வாழ்வாதாரம் என்றும் கண்ணீர் மல்க அழுது புலம்பினர்.
வேட்டையாடிய அனைத்து பறவைகளையும் விடுவிக்க வில்லையென்றால் வனத்துறையிடம் ஒப்படைபோம் என்றதும் அத்தனை பறவைகளையும் ஒவ்வொன்றாக விடுவித்தனர்.
அடைபட்டுக்கிடந்த பறைவைகள் அனைத்தும் சுதந்திர பறைவைகளாய் வானில் சிறகடித்து பறந்தது
கைது நடவடிக்கைக்கு பயந்து அந்த வேட்டையனின் குடும்பத்தினர் விட்டால் போதும் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு வேட்டை வாகனத்தில் அங்கிருந்து சென்றனர்
வேட்டைக்கும்பல் அங்கிருந்து சென்ற பின்னரும் அவிழ்த்துவிடப்பட்ட சில பறவைகள் பறந்து செல்ல இயலாமல் தவித்தபடி நின்றது.
அதன் அருகில் சென்று பார்த்த போது அவற்றின் இரு கண்களையும் நூலால் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
சிறுவர்களை கடத்தி கண்களை நோண்டி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் போல, பறவைகளை பிடித்து கண்களை குருடாக்கி இறைச்சிக்கு விற்றுவந்தது தெரியவந்தது.