அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமலை சாத்தப்பட்டது. பல்வேறு அனுமன் கோயில்களில் அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்..
மாதங்களில் சிறப்புப் பெற்றது மார்கழி- திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை.. ஞானத்தின் அடையாளமாகத் திகழ்வது மூலநட்சத்திரம்... இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்ததாகக் கூறுகின்றன புராணங்கள்..
ராமாயணத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான அனுமன் ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். பக்தி, சேவை, துணிச்சல், வேகம், பேச்சாற்றல் ஆகியவற்றிற்கு உதாரணமாக கூறப்படுபவர் அனுமன்.
ராமநாமத்தையே தாரக மந்திரமாகவும் உயிர்மூச்சாகவும் கொண்ட பக்தனான அனுமன் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல்லில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலையில் ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்..
கன்னியாகுமரி மாவட்டம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு ஒரு லட்சத்து 8 லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது..
தமிழகத்தின் பல்வேறு அனுமன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. பக்தர்கள் நெய்தீபம் ஏற்றியும், மலர்கள், வெற்றிலை துளசி போன்றவற்றை சூட்டியும் வழிபட்டனர்.