அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக, தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்பட்ட நிலையில், சில அனுபவமில்லா ஓட்டுனர்களால் பேருந்துகள் நடுவழியில் நின்றன.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏராளமான தற்காலிக ஓட்டுனர்களை களத்தில் இறக்கினர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு இது போன்ற தற்காலிக ஓட்டுனர் ஒருவர் அரசு பேருந்தை இயக்கி சென்ற நிலையில், அந்த பேருந்தில் கியர் சரிவர விழாமலும், வளைவில் பேருந்தை திருப்ப இயலாமலும் மெதுவாக நகர்ந்தபடியே ஓட்டிச்சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் பேருந்தை நடுவழியில் நிறுத்திய அந்த அப்ரசண்டி ஓட்டுனர், தான் டாடா ஏஸ் வாகனம் என்றால் எளிதாக ஓட்டி விடுவேன் என்றும் அரசு பேருந்து ஓட்டுவது கஷ்டமாக இருக்கு.. ஆள விடுங்க.. என்று கையெடுத்து கும்பிட்டு பேருந்தை அம்போவென விட்டுச்சென்றார்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தற்காலிக ஓட்டுனர் வளைவில் திருப்ப முயன்ற போது சாலையோரம் இருந்த பெட்டிக்கடையை பேருந்து பதம் பார்த்தது. அதிர்ஷடவசமாக கடை முன்பு யாரும் இல்லாததால் பொருட்கள் சேதம் அடைந்ததோடு கடை தப்பியது
இதற்கு எல்லாம் உச்சகட்டமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்றை வெளியே கொண்டுவருவதற்குள், படாதபாடுபட்டார்.. ஜல்லிக்கட்டு திடலுக்கு வர மறுத்து அடம்பிடிக்கும் காளை போல பேருந்து முன்னே செல்லாமல் முரண்டு பிடித்தது.
இதனை கண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்கள் அப்ரசண்டி வண்டிய எடுறா.. என்று கோஷமிட்டனர்
நீண்ட நேரம் போராடியும் அந்த பேருந்து முன்னே செல்ல மறுத்ததால், மப்டியில் இருந்த ஓட்டுனர் ஒருவர் பேருந்தில் ஏறி, ஆள் ஆளுக்கு ஓட்ட இது என்ன வாடகை சைக்கிளா.. அரசு பேருந்து என்று கெத்தாக கியர் போட்டு சிட்டாக வெளியே எடுத்துச்சென்று கொடுத்தார்.
சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு பேருந்து பழுதானதாக கூறி நடுவழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவகையில், அரசு போக்குவரத்து கழகம் , பெரும்பாலான ஊர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளை இயக்கியது குறிப்பிடதக்கது.