உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீட்சை பழங்கள், குற்றாலத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுமார் ஒரு டன் பேரீட்சைகளை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் மினரல் ஆயில் பூசி பளபளப்பாக்கப்பட்ட பேரீட்சை பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினர் குற்றாலத்தில் பினாயில் ஊற்றி அழிக்கும் காட்சிகள் தான் இவை...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாத சீசனில் அருவியில் குளிப்பதற்காகவே ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பேர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளமானவர்களும் தற்போது குற்றாலம் அருவியில் குளித்து விட்டு சபரிமலைக்கு செல்வதால் பக்தர்கள் கூட்டத்தையும் அருவிகளில் காண முடிகிறது.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் விற்கப்படும் வாழைக்காய் சிப்ஸ், பேரீட்சை பழங்களை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அதனை தெரிந்து கொண்ட வியாபாரிகளில் சிலர், பார்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பேரீட்சை பழங்களின் மேல் மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவை பூசி விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதனையடுத்து, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் தலைமையில் குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. அதில், மூன்று கடைகளில் மட்டுமே மினரல் ஆயில் பூசப்பட்ட சுமார் ஒரு டன் பேரீட்சை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பேரீட்சை பழங்கள் பேரூராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் கொட்டப்பட்டு அதன் மீது பினாயில் ஊற்றி அழித்தனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.
பெட்ரோலிய கழிவு பொருளான மினரல் ஆயில் எந்தவிதமான வாசனையோ இல்லாதது என்பதால் அதனை பேரீட்சை பழங்கள் மீது தடவும் போது அது பளபளப்பாக காட்சியளிக்கிறது. தரமற்ற பேரீட்சைகள் மீது இந்த ஆயிலை தடவி கண்ணை கவரும் வகையில் மாற்றுவதாலும், விலை குறைவாக உள்ளதாலும் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது. மினரல் ஆயில் தடவப்பட்ட பேரீட்சையை சாப்பிடும் போது அது வைட்டமின் சத்துக்களைக் குறைத்து, செறித்தல் உறுப்புகளைப் பாதித்து, மெல்லக் கொல்லும் விஷமாகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் குற்றாலம் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களை உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.