திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர், தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் புது சக்தியை நிரப்பிக் கொண்டு செல்வதாக கூறினார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் வகையில் சாலையோரங்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் உரையாற்றிய பிரதமர்,பாரதிதாசன் கூறியதைப் போல, புதிய துணிச்சலான உலகை உருவாக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றார்.
பட்டமளிப்பு விழாவுக்குப் பின் மீண்டும் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர், புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச முனையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
1100 கோடி ரூபாய் செலவில், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகளையும் 1500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடியது. விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ் கொண்ட புதிய முனையத்தின் முகப்பில் ஸ்ரீரங்கம் கோபுர மாதிரியும், உள்ளே தமிழகக் கலாச்சாரம் மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், திருச்சி -கல்லகம், காரைக்குடி-ராமநாதபுரம், சேலம்-வாணியம்பாடி உள்ளிட்ட 5 சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
9000 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தனது ஆட்சியில் இரண்டரை மடங்கு அதிக நிதியை ஒதுக்கியதாக கூறினார். இலவச ரேஷன், இலவச மருத்துவ சிகிச்சை, கழிவறையுடன் கூடிய வீடுகளை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கேரளா வழியாக லட்சத்தீவுகளுக்கு சென்றார்.