பலே பாண்டியா திரைப்பட பாணியில், தனது பெயரில் போடப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக பழைய நண்பனை தேடிக்கண்டுபிடித்து எரித்து கொலை செய்த ஜிம் மாஸ்டரை போலீஸார் கைது செய்ததன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக நண்பனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு தற்போது கம்பி எண்ணி வரும் ஜிம் மாஸ்டர் சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் தான் இவர்கள்.
வேலைக்குச் செல்வதாகக் கூறி வெளியே சென்ற தனது மகனைக் காணவில்லை என சென்னை எண்ணூரைச் சேர்ந்த லீலாவதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர் எண்ணூர் போலீஸார்.
செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு டில்லிபாபு சென்றதாக போலீஸாரிடம் தெரிவித்தனர் குடும்பத்தினர்.
சுரேஷை தேடி அயனாவரத்திற்கு போலீஸார் சென்ற போது அவர், செங்கல்பட்டு மாவட்டம் அல்லானூரில் தீ வைத்து எரித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஒரத்தி போலீஸிலும் வழக்கு பதிவாகி இருந்ததால் விசாரணை நடத்திய போலீஸாருக்கு குழப்பம் அதிகரித்தது.
டில்லிபாபுவின் செல்ஃபோன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய போது அந்த எண்ணும் அல்லானூரில் கடைசியாக இருந்தது தெரிய வந்ததோடு, மேலும் சில எண்களின் சிக்னலும் அப்பகுதியில் பதிவாகி இருந்தது.
அந்த எண்களுக்கு உரிய வேலூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி ராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர் போலீஸார். அதில், சுரேஷ் உயிரோடு இருப்பதும், டில்லிபாபு கொலையான அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
அரக்கோணம் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது மெகா மர்டர் பிளான் தகவல்கள் வெளியாகின. ஜிம் நடத்தி வரும் சுரேஷ், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். அந்த தொகையை, தான் உயிருடன் இருக்கும் போதே பெற்று அனுபவிக்க திட்டமிட்டுள்ளார் சுரேஷ்.
அதற்காக தன் வயதுடைய நபரை கொலை செய்து விட்டு அதனை விபத்து போல மாற்றி இறந்த நபர் தான்தான் என்பது போல காட்டிக் கொள்ள திட்டம் வகுத்துள்ளான் சுரேஷ்.
தன் வயதுடைய நபரை பல மாதங்களாக தேடிய போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபுவின் நினைவு வந்துள்ளது. அவரது குடும்பத்தினர் எண்ணூருக்கு குடிமாறி சென்றதை தெரிந்து கொண்டு டில்லி பாபுவை அங்குச் சென்று சந்தித்து நட்பு பாராட்டினார் சுரேஷ்.
சில நாட்கள் பழகிய பிறகு வெளியில் சென்று வரலாம் என டில்லிபாபுவை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார் சுரேஷ். அங்கு மது அருந்தியவர்கள், கூடுதலாக மது வாங்கிக் கொண்டு, அல்லானூருக்கு சென்றனர். அங்கு சுரேஷ்க்கு சொந்தமான வீட்டுமனையில் கட்டப்பட்டிருந்த சிறிய குடிசைக்கு சென்ற போது, சுரேஷின் நண்பர்களான ஹரி கிருஷ்ணன், கீர்த்தி ராஜனும் அங்கு வந்து சேர்ந்தனர்.
நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய போது, போதையில் இருந்த டில்லிபாபுவின் கழுத்தை சுரேஷ் ஏற்கனவே திட்டமிட்டவாறு நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மற்ற நண்பர்களுடன் சேர்ந்து சடலத்தோடு குடிசைக்கு பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தலைமறைவாகினர்.
சம்பவம் நடைபெற்ற இடம் சுரேஷிற்கு சொந்தமானது என்பதாலும், அவரும் சில நாட்களாக காணவில்லை என்பதால் இறந்தது சுரேஷ் தான் என கருதி குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் இறுதி சடங்குகள் செய்து சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கு சுரேஷின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்த நிலையில், சம்பவத்தை தற்கொலையாக ஒரத்தி போலீஸார் பதிவு செய்திருப்பதாலும், விபத்தில் உயிரிழந்தால் மட்டுமே ஒரு கோடி ரூபாய் தர முடியும் என காப்பீட்டு நிறுவனம் கூறியதாக தெரிகிறது.
இதனால், தங்களது பங்காக ஆளுக்கு 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என நினைத்த கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணனும், தனது பங்காக 60 லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்த சுரேசும் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.