கனமழையால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பல இடத்தில் குண்டும் குழியுமாக கிடப்பதால், வாகனங்கள் பழுதாவதாகவும், கடும் சிரமத்தை சத்தித்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை சாலையை சீர் செய்வதிலும் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச்செல்லும் சாலையில் பல இடங்கள் மழை நீர் அடித்துச்சென்றதால் குண்டும் குழியுமாக உருக்குலைந்து காணப்படுகின்றது. மழை நின்று வாரங்கள் கடந்தாலும் சாலை இன்னும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்
கிளாம்பாக்கம் தொடங்கி செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர், விக்ரவாண்டி, உளுந்தூர்பேட்டை என 4 சுங்கசாவடிகளை கடந்து செல்ல நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள் சீரமைக்கப்படாத சாலையில் தங்கள் வாகனத்தின் சக்கரங்கள் ஏறி இறங்குவதால் வாகனம் பழுதாவதாகவும், இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்
மழை நின்ற பகுதிகளிலாவது போர்க்கால அடிப்படியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்துக்கள் நிகழும் ஆபத்து உள்ளதால் அதனை கவனத்தில் கொண்டு சாலை பள்ளங்களை விரைந்து சரி செய்ய வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவோரின் கோரிக்கையாக உள்ளது.