தென்காசி மாவட்டம், பண்பொழி வனப்பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை வனத்துறையினர் கயிறு கட்டி போராடி மீட்ட நிலையில் கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு வனத்துறை ஊழியர்களை முட்டித்தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை காப்பாற்றிய பாவத்துக்கு அந்த மாடு வனத்துறையினரை விரட்டி விரட்டி முட்டிய காட்சிகள் தான் இவை..!
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பண்பொழி வனப்பகுதியில் உள்ள வண்டாடும் பொட்டல் புது குலத்திற்கு கீழ்புறம் உள்ள முகமது இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சுமார் ஐந்து வயதுடைய ஆண் காட்டு மாடு ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற கடையநல்லூர் வனத்துறையினர் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்டுமாடை காப்பாற்றுவதற்காக கயிறுகளை கட்டி மாட்டை மீடக முயற்சி மேற்கொண்டனர்.
அந்த மாடு அளவுக்கதிகமான எடையில் இருந்ததால் அதனை உடனடியாக வெளியே கொண்டு வர இயலவில்லை
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த மாட்டை பத்திரமாக கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். கரையைத் தொட்டவுடன் ஆவேசமான மாடு தன்னை மீட்டவர்களையே முட்டித்தூக்கியது
மேக்கரை வனத்துறை அலுவலர் அம்பலவாணன் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரையும் தள்ளி விட்டது. இதில் பால்ராஜ் அந்த மாட்டிடம் சிக்கிக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் கம்பால் ஒரு அடி கொடுத்தும், கூச்சலிட்டும் மாட்டை விரட்டி, பால்ராஜை காப்பாற்றினர்
அந்த மாடு வாங்கிய அடியால் , காட்டுக்குள் ஓடி மறைந்தது. கயிறு கட்டி மீட்ட போது அந்த மாட்டிற்கு ஏற்பட்ட வலிகாரணமாக அது ஆவேசமாகி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.