சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்த மகளின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனச்சமூடு தோலடி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகள் ரோகிணி சீனாவில் கடந்த 6 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்துள்ளார். படிப்பு முடிந்து அடுத்த மாதம் 12ஆம் தேதி சொந்த ஊர் திரும்ப டிக்கெட் எடுத்திருந்தவருக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
13ஆம் தேதி நள்ளிரவு அவர் உயிரிழந்துவிட்டார் என்று செய்தி கிடைத்துள்ளது. ரோகிணியின் உடலை சொந்த ஊர் கொண்டுவர 22 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே படிப்புச் செலவுக்காக அதிக கடன் வாங்கியுள்ளதால் செய்வதறியாது தவித்து வருவதாக பெற்றோர் கூறுகின்றனர்.