திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான ஆய்வுக்குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நனைந்த கோப்புகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு, நெல்லை சந்திப்பு, டவுன் காட்சி மண்டபம் பகுதியில் மழையால் இடிந்த வீடுகள் உள்பட பல்வேறு பகுதியை பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மாநகராட்சி வர்த்தக மையத்தில் வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் முறையாக வரவு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா என பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.