தென் மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்ற முதலமைச்சர், 4 மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுடன் உரையாடி, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேத விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கிக் கூறினர். வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள், மருத்துவ முகாம், போக்குவரத்து சேவையை சீர் செய்வது உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த தலைமைச் செயலாளர், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தேங்கியுள்ள தண்ணீரை விரைவில் அப்புறப்படுத்தி மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.