திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடுமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த எண்ணெய் கிணற்றிலிருந்து அதிக அழுத்தத்துடன் எரிவாயு வெளியேறியதால், கடந்த 2013ஆம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன.
3 மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களுடன் வந்த ஓ.என்.ஜி.சி. பணியாளர்கள், பராமரிப்பு என்ற பெயரில் மீண்டும் எண்ணெய் எடுக்கும் பணிகளை தொடங்கியதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.
கிணற்றில் நிலவும் எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்ற 39 நாட்கள் ஆகும் என்றும், அதன் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓ.என்.ஜி.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை மேற்பார்வையிட ஆட்சியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.