செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை அடுத்த தாலுகா ரயில்வே கேட் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிக பாரம் ஏற்றி வந்ததால் தண்டவாளம் உடைந்து 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வரையில் இயக்கப்படுகின்றன.
திருமால்பூர், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், சுமார் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும், சுமார் ஒரு மணி நேரமாக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
தடம் புரண்ட ரயிலைச் சீரமைக்க ஏராளமாள ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாகவும், விரைவில் நிலைமை சீரடையும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.