சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குனர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.
இவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்சின் அனைத்து நகைகடைகளையும் மூடி, அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 11 கிளைகளிலும் போலி நகைகளை வைத்து வாடிக்கையாளர் களை ஏமாற்றியதும் தெரியவந்தது. பின்னர் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் மற்றும் 11 புள்ளி 60 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.
100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செயத இவர்கள் அதனை போலி நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நகை கடை உரிமையாளர் மதன் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜோதி, அவரை வருகிற 21- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.