விழுப்புரம் மாவட்டம் அம்மனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாடிய கிராமிய பாடலால் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் டி.இமான், தனது இசையில் சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தாய்ப்பாசம் அறிந்தவர்களுக்கு... தந்தை பாசத்தின் அருமையை அசத்தலான குரலால் பாடிக் கொண்டிருக்கும் இவர் தான் மாணவி தர்ஷினி..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கத்தை சேர்ந்த பம்பை உடுக்கை இசைக்கலைஞர் ராஜ்குமார். கூலிவேலைகளையும் பார்த்துவருகிறார். இவரது மகள் தர்ஷினி, அனந்தமங்கலத்தில் உள்ள உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ஷினி தனது வீட்டு அருகே பாடிய பாடலை வீடியோ எடுத்து கார்த்தி என்ற இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் மாணவியின் பாடல் வைரல் ஆனதை தொடர்ந்து இசை அமைப்பாளர் டி. இமான் தர்ஷினியின் தந்தையை தொடர்பு கொண்டு தர்ஷினியின் குரல் வளத்தை பாராட்டியதோடு, அவருக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இமானின் இந்த அழைப்பால் மகிழ்ச்சியில் உள்ளார் மாணவி தர்ஷினி
இமான், ஏற்கனவே பார்வைதிறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஒருவரை ரஜினியின் அண்ணாத்த படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது.