கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே காதல் திருமணம் செய்ததை கண்டித்த தாயை அடித்து கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டு காணவில்லை என்று கண்ணீர் விட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் .இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் இரு மகன்களும் உள்ளனர். பெண் பிள்ளைகளை திருமனம் செய்து கொடுத்த நிலையில் ராஜேந்திரன் திருப்பூரிலும், மூத்த மகன் சென்னையிலும் வேலைபார்த்து வருகின்றனர். கடைக்குட்டியான 22 வயது சேவாக் மட்டும் வேலைக்கு செல்லாமல், தாய் கஸ்தூரியுடன் தங்கி இருந்தான். கஸ்தூரி விவசாய கூலி வேலைகளுக்கு சென்று தனது மகனின் செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மாமா வீட்டிற்கு அழுதபடியே சென்ற சேவாக், பசிக்குது மாமா... அம்மாவை காணவில்லை என்று கூறி கதறி உள்ளான். சேவாக்கை சாப்பிட வைத்து , தனது இரு சக்கரவாகனத்தில் ஏற்றிக் கொண்டு கஸ்தூரியை பல இடங்களில் தேடி உள்ளனர். இறுதியாக சேவாக்கின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு, தாயும் மகனும் வசித்து வந்த கூறை வேய்ந்த மண் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். பூட்டப்பட்ட வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த போது , குழி தோண்டி மூடப்பட்டு களிமண் கொண்டு புதிதாக பூசி இருப்பதை கண்டு இது என்ன ? என்று கேட்கவே உஷாரான சேவாக் தப்பி ஓடி உள்ளான்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவனை விரட்டிப்பிடித்து அடி வெளுத்தனர். இதில் கடந்த 21 ந்தேதி தாயை அடித்துக் கொலை செய்து சடலத்தை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்ததாக சேவாக் ஒப்புக் கொண்டான். சேவாக், ஒரு பெண்ணை காதலித்து வீட்டுக்குத்தெரியாமல் திருமணம் செய்துள்ளான் அந்தப்பெண் கோவையில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகின்றது. சேவாக்கின் காதலுக்கு தாய் கஸ்தூரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சம்பவத்தன்று தான் காதலியை பார்த்து விட்டு மது போதையில் வீட்டுக்கு வந்ததை அறிந்து தாய் கடுமையான திட்டியதால் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாகவும், கொலை யை மறைக்க சடலத்தை வீட்டுக்குள் புதைத்ததாகவும் சேவாக் தெரிவித்துள்ளான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு அருகே விறகுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தக்கறை தோய்ந்த பாயை கைப்பற்றினர். வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த கஸ்தூரியின் சடலத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்து பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்
விழுந்த தர்ம அடியில் எழுந்திரித்து ஓட இயலாமல் அங்கேயே அமர்ந்து அழுது கொண்டிருந்த சேவாக்கை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். ஒற்றை காலை இழுத்தபடி நடந்து சென்றான்
கடைசி பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்ததால், ஒழுக்கமாக பள்ளிக்கூடம் செல்லாமல் கஞ்சா குடிக்கிகளின் சகவாசத்தால் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி, தாயின் உழைப்பில் சாப்பிட்டு ஊதாரியாக சுற்றிவந்த சேவாக், இறுதியில் பணத்துக்காக தாயை கொன்று கொலையாளியாகி இருப்பதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.