காதல் மனைவி தன்னுடைய பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடி விட்டதாக கூறி புகார் அளித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
ஆதரவற்ற நிலையில் வளர்ந்தாலும் காதலித்து திருமணம் செய்த மனைவியை தாயை போல பார்த்துக் கொண்டதாகவும், அவரோ இன்ஸ்டாகிராம் காதலனுடன் டா டா காட்டிவிட்டதாக கலங்கும் காட்சிகள் தான் இவை.!
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்ற 27 வயதான இளைஞர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென வாட்டர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார் அவரை தடுத்த போலீசார், தண்ணீரை அவர் மீது ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்
அழுதபடியே செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் பேசிய பேச்சி முத்து , சிறுவயதிலேயே தாய் தந்தையின் அரவணைப்பை இழந்த தான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தனியாக கங்கைகொண்டான் பகுதியில் வீடு எடுத்து தாயை போல கவனித்து வந்ததாகவும். கடந்த சில நாட்களுக்கு முன்பு instagram மூலம் வேறு ஒருவருடன் சாட்டிங் செய்ததை பார்த்து கண்டித்ததாகவும், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சன்முகப்பிரியா ஓடிப்போனதாகவும் தெரிவித்தார்.
கங்கை கொண்டான், நாங்குநேரி காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற பேச்சி முத்து, தனது மனைவி சண்முகப்பிரியா வேறொரு நபரை திருமணம் செய்து வாழ்வதாகவும், வீட்டில் இருந்து அவர் ஓடிப் போனபோது தான் சம்பாதித்த முப்பது ஆயிரம் ரூபாய் பணம் , வீட்டில் இருந்த நகை உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றதாகவும், ஒரு பொண்ணு வந்து புகார் சொன்னா.. உடனே கேட்பீங்கல்ல, என் புகாரை ஏன் விசாரிக்க மறுக்கிறார்கள் ? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்
பேச்சிமுத்து அளித்த புகார் தொடர்பாகவும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.