கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.மாவிடத்தல் கிராமசாலையை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 4 குழந்தைகள் காயம் அடைந்ததால் ஆவேசமான பொதுமக்கள் அதிகாரியை சுற்றிவளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
கிராம இணைப்புச்சாலையை அகலப்படுத்தாமல், அலட்சியம் காட்டியதால், பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விட்டதாக கூறி அதிகாரியை பொதுமக்கள் வறுத்தெடுக்கும் காட்சிகள் தான் இவை..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ. மாவிடந்தல் கிராமத்துக்கு செல்லக்கூடிய கிராம இணைப்பு சாலை மழையின் காரணமாக சேதம் அடைந்து குறுகிய நிலையில் உள்ளதாக கூறி பல முறை அந்த ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த சாலையை அகலப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அந்த சாலையில் குழந்திகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பள்ளி வாகனம், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது சாலையிலிருந்து விலகி விளை நிலத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நான்கு பள்ளி குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அரசு அதிகாரியை , வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்
தான் பார்வையிட வந்திருப்பதாக சமாளித்த அதிகாரியிடம் அங்க 4 குழந்தைகள் சாக கிடக்கு, உங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு ? என்று கடுமையாக சாடினர்
இதன் தொடர்ச்சியாக கோ. மாவிடந்தல் கிராம சாலையை விரிவுபடுத்த வேண்டும் சீர் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வைக்கும் கோரிக்கைகளின் தேவை அறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!