விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல ஸ்வீட் கடை மேலாளர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அழுது நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தீபாவளி நாளில் கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கணவனை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக கூறி கைக்குழந்தையுடன் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருக்கும் இவர் தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காளீஸ்வரி ..!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் 70 ஆண்டுகளாக ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்த குருசாமியின் மகனான சிவக்குமார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் தீபாவளி அன்று மாலை படுகொலை செய்யப்பட்டார்.
காதல் மனைவி காளீஸ்வரி மற்றும் 2 வயது மகன் கண் முன்பே நிகழ்ந்த கொலை தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸார் விசாரணையை முன்னெடுத்தனர்.
ராஜபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான தந்தையின் கல்லறை தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேரை சிவக்குமார் கண்டித்ததாகவும் அப்போது அவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் அவரது மனைவி காளீஸ்வரி போலீஸில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அழாமல் திரு திருவென விழித்தபடியே இருந்த காளீஸ்வரியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே தீவிர விசாரணையில் 50 கோடி ரூபாய் சொத்துக்காக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அம்பலமானது
முதல் மனைவியை பிரிந்த சிவக்குமார் ஸ்வீட் ஸ்டாலில் வேலைப்பார்த்து வந்த காளீஸ்வரியை கர்ப்பமாக்கியதால், இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டது தெரிய வந்தது.
சிவக்குமார் சென்னைக்கு சென்ற பிறகு, வீட்டிற்கு பக்கத்திலுள்ள காலி மனையில் யோகா, சிலம்பம் சொல்லிக் கொடுத்து வந்த ஐயப்பனுடன் காளீஸ்வரிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சிவக்குமார் காளீஸ்வரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. எனவே, காதலன் ஐயப்பனுடன் சேர்ந்து சிவக்குமாரை தீர்த்துக் கட்ட ஸ்கெட்ச் போட்டுள்ளார் காளீஸ்வரி.
ஊருக்கு ஒதுக்குப்புறமான தங்களது தோட்டத்திற்கு செல்லும் வழியில் சி.சி.டி.விகள் இல்லாததை கவனித்த காளீஸ்வரி அதனை கொலை செய்வதற்கான இடமாக தேர்ந்தெடுத்துள்ளார்.
அதன்படி, தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த கணவனை மாமனாரின் கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்துவோம் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார் காளீஸ்வரி.
அங்கு, காளீஸ்வரியின் திட்டத்தின் படி தனது நண்பர்களான விக்னேஷ், மருதுபாண்டியன் ஆகியோருடன் காத்திருந்த யோகா மாஸ்டர் ஐயப்பன், சிவக்குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து ஸ்வீட் ஸ்டால், வீடு, தோட்டம் உள்பட அனைத்து சொத்துக்களையும் காளீஸ்வரி பெயருக்கு மாற்றித் தரும்படி மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர் மறுக்கவே சிவக்குமாரை சரமாரியாக தாக்கி கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு கணவரை மது போதை கும்பல் கொன்றதாக காளீஸ்வரி நாடகமாடியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
50 கோடி ரூபாய் சொத்துக்காக சிவக்குமாரை தீர்த்துக்கட்டியதாக காளீஸ்வரி, காதலன் ஐயப்பன், கூட்டாளிகளான விக்னேஷ், மருதுபாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.