தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஒரிசா கடலோர பகுதியை நோக்கிச்செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 18 ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே, காற்றின் வேகமாறுபாடு காரணமாக 17 ஆம் தேதிக்கு பின்னரும் கனமழை நீடிக்கும் என்றும், வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.