கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் 5 மணி நேரம் அடைத்து வைத்து, தலையில் மொட்டை அடித்தும், முதுகில் பெல்ட்டால் அடித்தும் , சுற்றி நின்று கைகொட்டி சிரித்து சித்ரவதை செய்ததாக, ராகிங் கொடுமைக்குள்ளான மாணவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பீளமேட்டிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் ராகிங் கொடுமைக்கு உள்ளானார் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் மாணவர் ஒருவர். பாதிப்பிற்குள்ளான மாணவரின் புகாரில் 7 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்த போலீஸார். தலைமறைவான வெங்கடேஷ் என்ற மாணவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்
போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் மாணவனுக்கு நிகழ்ந்த பல்வேறு கொடுமைகள் விவரிக்கப்பட்டு கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. தனது அறையில் இருந்து இழுத்துச்சென்று அவர்கள் அறையில் வைத்து அடைத்து, சீனியர்கள் பணம் கேட்டால் தரமாட்டியா என்று கூறி பெல்டாலும், கல்லூரி வழங்கிய ஐ.டி கார்டாலும் மாணவனை முதுகில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். அப்போது, ஸ்டார்ட் மியூசிக் என ஒருவர் சவுண்ட் விட மற்றவர்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்து கைதட்டிக் கொண்டே ட்ரிம்மரால் முடியை மழித்துள்ளனர். கீழே விழுந்த முடியை அதே மாணவனை முட்டிப் போட்டுக் கொண்டே எடுத்து குப்பையில் போட வைத்தும் கொடுமையின் உச்சத்தை அரங்கேற்றியுள்ளது ராகிங் கும்பல்.
5 மணி நேரமாக ராகிங் கும்பல் கேலியும், கிண்டலும் செய்துக் கொண்டே தங்களுடன் படிக்கும் சக மாணவனை ராகிங் சித்ரவதை செய்ததோடு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த மாணவன் தனது அறைக்குச் சென்று அழுதபடியே தூங்கி உள்ளான். பின்னர் தனது தாய் தந்தைக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதாகவும், தனது முதுகில் ரத்தங்காயங்களும், ஆங்காங்கே வீக்கங்களும் இருப்பதை பார்த்த மற்ற மாணவர்கள் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட பிறகே ராகிங் கொடுமையின் கோரமுகம் மற்றவர்களுக்கு தெரிய வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.