பாம்பு கடித்து விட்டால் உயிரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, திரைப்படத்தில் வருவது போன்று பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சுவது சரியா என்பது குறித்தெல்லாம் விளக்கி ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் ஆகிய நான்கு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் உள்ளதாகக் கூறும் வனச்சரகர் சதீஷ், இந்த வகை பாம்புகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறார்.
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக கை மற்றும் கால்களில் அணிந்துள்ள அணிகலன்களை கழற்றிவிட வேண்டும் என்றும் பாம்பு கடித்த இடத்தில் ஐஸ் போன்ற குளிர்ச்சியான பொருட்களை வைக்கக்கூடாது என்றும் சதீஷ் கூறுகிறார்.
திரைப்படத்தில் வருவது போன்று பாம்பு கடித்த இடத்தில் இருந்து விஷத்தை எடுக்கிறேன் எனக் கூறி வாயை வைத்து உறிஞ்ச கூடாது என்று கூறும் சதீஷ், வாய் வைத்து உறிஞ்சுவதால் அவர்களுக்கும் விஷத்தன்மை பரவ வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார்.
வீட்டில் பாம்புகளைக் கண்டால் தீயணைப்புத்துறைக்கோ, தனியார் பாம்பு பிடி நிபுணர்களுக்கோ தகவல் கொடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.