கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணன் என்பவரை வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான இரண்டு பேர், போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது அவர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனின் கடைக்குச் சென்ற இரண்டு பேர் ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்ததாகவும் அவரது கையில் கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கி மற்றும் எழில்நிலவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருவரில் எழில்நிலவன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவன் மூலமாக கண்ணனை தீர்த்துக்கட்ட சிறையிலிருந்தவாறே விக்கி திட்டம் தீட்டியதாகவும் அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி பாம் ரவி என்பவன் மூலம் கடந்த வியாழக்கிழமை கண்ணனை வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலை தொடர்பாக எழில் நிலவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாம் ரவி உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான 5 பேரில் சல்மான்கான், சக்திவேல் ஆகிய இருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்று சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.